14 Dec 2016

TOSA

*சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் TOSA மின்சார பயணிகள் பேருந்து*


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் பொதுப் போக்குவரத்தை மின்சார மயமாக்க சுவிட்சர்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ”TOSA” என பெயரிடப்பட்ட மின்சார பயணிகள் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேருந்தில் 15 நொடிகள் சார்ஜ் செய்தால் 2 கி.மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் சக்தி வாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்து முழுவதுமாக சார்ஜாக நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த பேருந்தில் 130 பயணிகள் பயணிக்க முடியும்.

பொதுவாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய டிராம் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டிராம் பேருந்துகள் மின்சார இணைப்பு செல்லும் பாதையில் மட்டுமே செல்ல முடியும். ஆனால் ”TOSA” பேருந்துகள் பேட்டரி மூலம் இயங்குவதால், சாதாரண டீசல் பேருந்துகள் போல சுதந்திரமாக இயங்க முடியும்.

வரும் 2018-ஆம் ஆண்டு ஜெனிவாவில் TOSA பேருந்து பயன்பாட்டுக்கு வரும் எனவும், அந்நகரத்தின் 23 வது எண் வழித்தடத்தில் இந்த பேருந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 பயணிகள் இந்த பேருந்தை பயன்படுத்த உள்ளனர்.

”TOSA” பேருந்துகள் பயன்படுத்தப்பட்டால், ஒரு ஆண்டில் 1000 டன் கரியமில வாயு வெளியேறுவதை தடுக்க முடியும் என சுவிட்சர்லாந்து அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment